‘தால்’ என்ற தமிழ் வேர்ச்சொல்லுக்கு ‘மேலிருந்து கீழாக தொங்குவது ‘ என்ற பொருள் வரும். மரத்தில் மேலிருந்து கீழாக கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் துணியில் குழந்தையை போட்டு ஆட்டுவது தால் + ஆட்டு.

பத்தாம் நூற்றாண்டுக்கு ( சில சமயம் சற்றே முன்னுக்கும் ஆகலாம் ) முற்பட்ட எந்த தமிழ் இலக்கியத்திலும் ‘ தாலி ‘ என்ற சொல் இரவே இராது. சங்க இலக்கியங்களில் ஆண் – பெண் திருமணம் குறித்த குறிப்புகளும், தலைவனும் தலைவியும் தங்கள் அன்பின் அடையாளமாக தங்கள் குலக்குறிகளை ஆளுக்காள் சூட்டிக்கொள்கின்ற குறிப்புகள் வருமே ஒழிய ‘ தாலி ‘ என்கிற சொற்பிரயோகமே இராது.

என் ஞாபகம் சரி என்றால் பனிரெண்டாம் நூற்றாண்டில் தமிழில் எழுந்த பெரிய புராணத்தில் தான் முதல் முதல் தாலி பற்றிய குறிப்பு வருகிறது.தமிழர் பகுதிகளில் எட்டாம், பத்தாம் நூற்றாண்டுகளில் எழுந்த சைவ வைணவ மதங்களை ஊற்றுவாயாக பாவித்து , கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பிராமணர் தங்களோடு காவிக்கொண்டு வந்த சாதியையும் சடங்குகளையும் தமிழர் மேல் திணித்து தாங்கள் குளிர்காயத் தொடங்கினர்.

அந்த பிராமணிய வழி தான் பெண்ணுக்கு ” மாங்கல்யம் ” பூட்டி அவளை தனது ” உடமை ” என்று கொள்வது. மாங்கல்யம் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு, ” தால் ” என்ற வேர்ச்சொல்லை வைத்திருந்த ஒரு பாவமும் அறியாத தமிழ், அதுவும் கழுத்தில் மேலிருந்து கீழாக தொங்கிக்கொண்டு தானே இருக்கிறது என்று அதை ” தாலி ” என்றது. மற்றும்படி தாலி கட்டுதலோ, தாலி என்ற சொல்லோ தமிழுக்கும் தமிழர்க்கும் தொடர்பில்லாதது. அது முழுக்க் முழுக்க பிராமணிய பெண் குறித்தான பிற்போக்குத்தனத்தின் குறியீடு