எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது-
22.தென்னாடும் தென் கிழக்கும்
இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து….

ஜகார்தா அருங்காட்சியகத்தில் அடுத்து நம் கருத்தைக் கவர்ந்தது ஒரு அரிய சிலை.
அமோக பாசர் (Amoghapasa) என்னும் அவலோகிதர்(Avalokiteshvara) சிலை.

ஏதோ சாவக பூமியின் பழைய சிலை என்ற எண்ணத்தோடு இலேசாக எட்டிப்பார்த்த எனக்கு அந்தக் கற்சிலை 13 ஆம் நூற்றாண்டின் அரசியல், சமூக ,பொருளாதார, ஆன்மிக குறிப்புகளை கொட்டிக் கொடுக்கும் என்ற எண்ணம் சிறிதளவும் அப்போது தோன்றவில்லை. இன்னும் கொஞ்சம் உள்ளே சென்றால், தமிழகத்தின் சோழ நாடு, பாண்டிய நாடு, இலங்கை, கிழக்கு சாவகம் (EAST JAVA), சுவர்ணபூமி (SUMATRA), மலாய் (MELAYU) என்று இத்தனை மண்ணின் நிகழ்வுகளையும் தன்னுள் அமைதியாக அடை காத்து கல்லாய்ச் சமைந்து இருந்தது.

கொஞ்சம் ஆய்வு மேற்கொண்ட போது சீன தேசத்தின் குப்ளாய் காண் (KUBLAI KHAN, FORMER EMPEROR OF THE YUAN DYNASTY) இடையில் வந்து நிற்கின்றார். இதே கால கட்டத்தில் குப்ளாய் காண் அரண்மனையில் இருந்து நேராக சுவர்ண தீவு /சுவர்ண பூமி/ சுமத்ரா வந்து சேர்ந்த வெனிஸ் வணிகர் மார்கோ போலோ (MARCO POLO ) அடுத்து பயணம் செய்ய இலங்கை கிளம்புவதற்கு கடற் காற்று சாதகமாக இல்லை என்பதால் 6 மாதம் சுமத்ராவிலேயே தங்கி இருக்கிறார். இலங்கைக்கு அடுத்து அவரது அடுத்த பயணம் முதலாம் மாற வர்மன் குலசேகர பாண்டியனின் பாண்டிய நாடு. இப்படி தென்னகத்தை இணைக்கிகின்ற நினைக்கின்ற கால கட்டத்துக்குத்தான் இந்த கற்சிலை சொற்சிலம்பம் ஆடப்போகிறது.
கப்பலேறிப் போவோமோ …. அலை கடல் நடுவே பல கலம் செலுத்திய ஆதித் தமிழரின் ஆன்ம லயத்துடன் என்னோடு பயணம் வர ஆயத்தம் ஆகுங்கள்.
பமலாயு பயணம் /(PAMALAU EXPEDITION)
ஆகஸ்ட் மாதம் 22 ஆம் நாள், 1286 ஆம் ஆண்டு… கிழக்கு சாவகத்தின் சிங்கோசாரி இராச்சிய மன்னர் அபிஷேக ஸ்ரீ மஹா ராஜாதி ராஜா கர்த்த நகார விக்கிரம தர்மோதுங்க தேவர் (Aabhiseka Sri Maharajadiraja Kertanagara Wikrama Dharmmottunggadewa) சுவர்ணபூமியின் தலைநகரான தர்மாஸ் ராயா (Dharmasraya) வின் அரசர் ஸ்ரீ மஹா ராஜா ஸ்ரீமத் திரிபுவன ராஜ மௌலி வர்மா தேவர் (Sri Maharaja Srimat Tribhuwanaraja Mauliwarmadewa ) அவர்களுக்கு தமது முக்கிய அரச தந்திரியான அத்வயபிரம்மாவின் தலைமையில் மஹிசா அனாபிராங் (Mahisa Anabrang/Kebo Anabrang) எனும் தூதர் மூலம் போதிசத்வ அமோகபாஷ லோகேஸ்வரரின் சிலையைப் பரிசாக அனுப்பி இருந்தார்.
அமோகபாசன் என்பது அவலோகிதேஸ்வரர் வடிவமாகிய ஒரு போதிசத்த்வரின் திருவுருவமாகும். அவரை “தவறாத கயிறு கொண்ட போதிசத்த்வர்” என்று அழைக்கின்றனர். அமோகபாசன், புத்தமதத் தெய்வங்களின் பரந்த கோட்பாட்டிற்குள் அடங்குவார், குறிப்பாக அவலோகிதேஸ்வரர் மற்றும் தந்திர வழிபாட்டு மரபுகளுடன் தொடர்புடையவர்.
இந்தச்சிலை தான் ஜகார்தாவின் தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து கொண்டு சரித்திரத்தின் இத்தனை பக்கங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறது .. 7 நூற்றாண்டடுகளைக் கடந்து …
சரி எதற்காக 2,000 கி.மீ. தூரம் கடந்து இந்தச் சிலையினைக் கொண்டு செல்ல வேண்டும்.?
இந்த கி.பி.1275 ஆம் வருட கால கட்டத்தின் அரசுகளை அவர்களது அரசியல் தந்திரங்களை, இராஜதந்திர உறவுகளின் அடையாளங்களை அலசி ஆராய்ந்தால் மன்னர்களின் சாணக்கியத்தனம் விளங்கும்.
ஸ்ரீவிஜயன் மண்டலத்தின் மௌலி‘ வம்சம்- ஸ்ரீ மஹா ராஜா ஸ்ரீமத் திரிபுவன ராஜ மௌலி வர்மா தேவர் (Sri Maharaja Srimat Tribhuwanaraja Mauliwarmadewa )
கி.பி.1025 இல் நமது சோழ மண்டலக் கப்பற்படை இராசேந்திர சோழன் தலைமையில் சுவர்ணபூமியின் மீது படை எடுத்து சைலேந்திர வம்சம் ஆண்டு வந்த ஸ்ரீவிஜய பகுதியை துவம்சம் செய்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சைலேந்திரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு ‘மௌலி’ வம்சம் தலை எடுத்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகாலம் அரசு புரிந்தது.. இந்தக் குடும்பம் ஒரு காலத்தில் ஸ்ரீவிஜயன் மண்டலத்தின் உறுப்பினராக இருந்து, சுமத்ரா மற்றும் மலாய் தீபகற்பத்தை உள்ளடக்கிய முன்னாள் ஸ்ரீவிஜய மண்டலத்தை ஆட்சி செய்யும் அதிகாரத்தில் இறங்கியதாகத் தெரிகிறது. ஆரம்பத்தில் முவாரோ ஜம்பியை மையமாகக் கொண்டு, ஸ்ரீவிஜயத்தின் வாரிசு மாநிலமாகக் கருதப்பட்டது. பிந்தைய காலகட்டத்தில், ராஜ்ஜியத்தின் தலைநகரம் படாங்கரியிலிருந்து தர்மஸ்ரயாவிற்கு (உள்நாட்டிற்கு மேற்கு நோக்கி) மாற்றப்பட்டது,
சிங்கசாரியின் மன்னர் கெர்தனேகரா (ஆட்சி 1268–1292):
Sri Maharajadhi Raja Sri Kertanagara Wikrama Dharma Tungga Dewa (Kertanagara) or சிவபுத்தா
கீழைச்சாவகத்து சிங்கசாரியின் ஐந்தாவது ஆட்சியாளராக கர்த்தநகரா இருந்தார், முந்தைய மன்னரான விஷ்ணுவர்தனாவின் (ஆட்சி 1248–1268) மகனாவார். அவர் 1254 முதல் அதிகாரத்தை திறம்பட வைத்திருந்தார், மேலும் 1268 இல் அவரது தந்தை இறந்தபோது அதிகாரப்பூர்வமாக அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார்.
மங்கோலிய வம்சம்/ யுவான் வம்சம் (Yuan dynasty, 1279–1368)
கான் பாலிக்கை (இப்போது பெய்ஜிங்/Beijing) தளமாகக் கொண்ட யுவான் வம்சத்தைச் சேர்ந்த மங்கோலியர்களை எதிர்கொள்ளும் வலிமையைக் கட்டியெழுப்பவே மேலே விவரித்த பமலாயு பயணம் (PAMALAU EXPEDITION) இலக்காக இருந்ததாக பல வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. அந்த நேரத்தில் மங்கோலிய வம்சம் என்றும் அழைக்கப்படும் யுவான் வம்சம், கொரியாவிலிருந்து ரஷ்யா (கீவன் ரஸ்/( Kievan Rus’ ), மத்திய கிழக்கு (பாக்தாத்தில் அப்பாஸிட் / Abbasid வம்சத்தை அழித்தது) மற்றும் கிழக்கு ஐரோப்பா வரை, அதன் பிரதேசத்தை விரிவுபடுத்தியது. அந்த ஆண்டுகளில், மங்கோலிய வம்சம் ஜப்பான் மற்றும் ஜாவா உட்பட அதன் பிரதேசத்தை விரிவாக்க முயற்சித்தது. எனவே இந்த பயணத்தின் நோக்கம் மங்கோலிய கடற்படையை ஜாவானிய கடல் பகுதிக்குள் நுழைவதை நேரடியாக தடுப்பதாகும்.

குபிளாய் காணின் தமிழ் மண்டலத்துடன் வணிக தொடர்புகள்:
குபிளாய் காணின் ஆட்சிக் காலத்தில் (1271–1294), யுவான் வம்சம் தென்னிந்தியாவுடன் கடல் வாணிபத்தில் ஈடுபட்டது. பாண்டியர் மற்றும் சோழ மண்டலங்களைச் சேர்ந்த தமிழ் வணிகர்கள் இந்தியப் பெருங்கடல் வாணிபத் தளத்தில் முதன்மை பெற்றிருந்தனர். சீனக் கோவில்கள் தென்னிந்திய வணிகர்கள் குவான்ஜோ (Zaytun) மற்றும் குவாங்சோ (Canton) போன்ற துறைமுகங்களில் செயல்பட்டதாகக் குறிப்பிடுகின்றன. தமிழ் வணிகர்கள் சீனாவிற்குப் முத்துக்கள், துணிகள் மற்றும் மசாலாபொருட்களை ஏற்றுமதி செய்தனர், அதேசமயம் சீனத் தேயிலை, பீங்கான் மற்றும் ஐசுவரிய பொருட்களை இறக்குமதி செய்தனர்.
மார்கோ போலோவின் தமிழ் நாடுகள் குறித்த விவரங்கள் :
குபிளாய் காணின் நீதிமன்றத்தில் பணியாற்றிய வெனீசியப் பயணக்காரர் மார்கோ போலோ, தமிழ் நாடுகள் (முக்கியமாக பாண்டியர் ஆட்சி) வழியாக பயணித்தபோது, தனது “The Travels of Marco Polo” நூலில் அவற்றைப் பற்றிக் குறிப்பிட்டார். இது மங்கோலியர்களுக்கும் தமிழ் பகுதிகளுக்கும் நேரடித் தொடர்பு இருந்ததைச் சுட்டிக்காட்டாது என்றாலும், மங்கோலிய அரசவைக்கு தமிழ் நிலங்களின் மீது ஒரு அறிவும் ஆர்வமும் இருந்ததை வெளிப்படுத்துகிறது.

MARCO-POLO
யுவான் வம்சத்தின் இலங்கை தாக்குதல் (1284):
1284-ஆம் ஆண்டு, குபிளாய் காண் இலங்கைக்கு ஒரு தூதரணி அனுப்பினார். இந்தத் தூதர் மங்கோல் ஜியால்போ என்பவரின் தலைமையில் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் அரசர்கள் மங்கோலியர்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான தமிழ் தொடர்பு என்னவெனில், இலங்கையில் அந்த நேரத்தில் சிங்கள மற்றும் தமிழ் அரசமைப்புகள் இருந்தன. குறிப்பாக யாழ்ப்பாண அரசு தமிழ் ஆதிக்கத்தில் இருந்ததால், தமிழ் அரசர்கள் அல்லது வீரர்கள் மங்கோலிய தூதர்களுடன் நேரடியாக உறவு கொண்டிருக்கலாம் அல்லது அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டிருக்கலாம்.
அன்றைய அரசியல் வானின் இந்தச் சூழ்நிலையில் பறந்து பார்ப்போம் நமது தொன்மையின் தொலைவுகளை…
அடுத்த பகுதிகளில்….
Comments are closed, but trackbacks and pingbacks are open.