டிராகன் @ டி ராகவன் – அஸ்வத் மாரிமுத்து

படத்திற்கு போகும் முன் ‘என்னடா டிராகன்னு பேர் வைச்சிருக்காங்களே’என்று தோன்றியது. கணவரிடம் ‘தோழிகளோட டிராகன் படம் பார்க்க போறேன்’ என்று சொன்ன போது, ‘என்ன இங்கிலீஷ் படமா’ என்றார், ‘அட இல்லங்க லவ் டுடே ஹீரோ ப்ரதீப் ரங்கநாதன் படம்’ என்று சொன்னதும், ‘ஓ ஆமா புதுப்படம் இல்ல அந்த மலையாளப்பொண்ணு அனுபமா கூட இருக்கு’ன்னு ஒரு தகவல சொன்னார். எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம தோழி அழைத்ததால் பார்க்கப் போனேன். பாதி வழியில ஒரு திரைத்துறை நண்பர்கிட்ட டிராகன் போறேன் என்று சொன்னபோது தான் படம் இன்னைக்கு தான் ரிலீஸ்னு தெரிந்தது. ‘ஹை ஜாலி முதல் நாள் முதல் ஷோ’ என்று சந்தோஷமாகப் போய் அமர்ந்தாயிற்று. சரி பாப்போம்னு பார்த்த படம் தான். விமர்சனம் எதுவும் படிக்காம படம் பார்க்கறது ஒரு பிளஸ். இந்த படத்துக்கு விமர்சனம் எழுதனும்னு எல்லாம் யோசிக்கவும் இல்ல. ஆனா படம் பார்த்து முடிச்சப்புறம் 4 குழந்தைங்கள்ள 3 கண்ண கசக்கிட்டு வந்ததப் பார்த்து, அட பாருடா நு இருந்துச்சு. சரி உடனே எழுதிடலாம்னு எழுதிய விமர்சனம் தான் இது.

ரொம்ப சாதாரணமா கல்லூரி, பசங்க, அடிதடி, காதல்னு ஆரம்பிக்கற படம், ஒரு பையன் எவ்வளவு நாசமா போக முடியுமோ அவ்வளவு கெட்டிக் குட்டிச்சுவரா போறாப்புல பயணப்படுது. நானும் பிரெண்ட்டும் அடடா என்ன மாதிரியான படத்துக்கு கூட்டி வந்து தொலைச்சோம் பசங்கள அப்படினு பீல் வேற பண்ணினோம். கீர்த்தி (அனுபமா) புண்ணியத்துல படம் சரியான பாதைல போக ஆரம்பிச்சது.

டிராகன் பெயர் காரணம் சொல்வாங்க பாருங்க. என்னமா யோசிக்கிறாங்கபா… என்ன படத்த எடுத்து வைச்சிருக்காங்கன்னு ரொம்ப நேரம் யோசிக்க விடாம, கொஞ்சம் சுதாரிச்சு மிச்ச படத்த அழகா நகர்த்திட்டு போறாரு டைரக்டர். படம் முழுக்க முழுக்க ஒருமாதிரி ஜாலியா போகுது. பொழுபோக்கு அம்சம் வாய்ந்த , வாய் விட்டு சிரிக்க வைக்கிற, கடைசில சிந்திக்க சொல்லி கட்டாயப்படுத்தற ப்ரதீப் ரங்கநாதன் படமா இருக்கு. அவர் தான் இயக்கி இருப்பாரோ அப்படின்ற சாத்தியகூறுகள் நிறைய தோனும் நமக்கு. எழுத்து /இயக்கம் அஸ்வத்னு போட்டாக்கூட ப்ரதீப் டச் நிறைய இருக்குது. அவருக்கு தனுஷோட பாடி லாங்க்வேஜ் நு எனக்கு மட்டும்தான் தோனிச்சானு தெரியல. உருவமோ, முகமோ , முடி சாயலோ, மேனரிஸமோ எதனாலயோ தனுஷ் நிறைய ஞாபகத்துக்கு வர்றார். நாம நினைக்கறத அவங்களே டயலாக் கா வைச்சிருக்காங்க, ‘நல்லி எலும்பு மாதிரி இருப்பான் சார்னு’. விடுதியில் அன்பு மற்றும் மாமனாரின் போன் கால் முடிந்து ஒரு ஆக்ட்டிங் கொடுப்பார். அவருடைய நடிப்புத்திறனுக்கான ஒரு நல்ல காட்சி. ஆரம்பத்தில் அவர் மேல் வரும் கோபம், வியப்பாய், எரிச்சலாய், ஆச்சரியமாய், பாவமாய், ஆதங்கமாய், அன்பாய் மாறும் வித்தையை செய்திருக்கிறார்.

சில இடங்களை நம்மால் யூகிக்க முடிகிறது மலர் டீச்சர் பாடல் முதற்கொண்டு, யோசித்தால் அதெல்லாம் தான் ரசிக்கமுடிந்தது, படத்திற்கான பிளஸ் என்றும் கூறலாம். அவர் அடித்து விடும் பொய்களைக் கண்டு நாமும் குட்டி டிராகன் போல விழுந்து கும்பிடலாம். இறுதிக் காட்சியில் மனதை தொடுவதாக ஒரு காட்சியை அமைத்து படத்தின் கோணத்தை மாற்றி அமைக்கிறார். செண்டிமண்ட் வேண்டும் என்று யோசித்திருக்கலாம். அதே லவ் டுடே கான்செப்ட் தான். எல்லாத்தையும் செய்துவிட்டு தன் அம்மாவிடம் புலம்பி திருந்துவது போலத்தான் இங்கேயும்.

டிராகனின் அப்பாவாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான் ரொம்பவே நல்ல நடித்திருக்கிறார். பாவம் அம்மாவாக வந்த இந்துமதிக்கு அவர் குரலையே கொடுத்து இருக்கலாம். இன்னொரு நடிகையின் குரல் தான் ஆனால் அவருக்கு பொருந்தவில்லை. மெய்யழகனில் ஒரு காட்சியில் வந்து பலமுறை சமூக ஊடகங்களில் வலம் வந்தவர் படம் முழுக்க வந்தாலும் பெரிதாக ஒட்டவில்லை. மிஷ்கின் வாய்ப்பே இல்லை. கே.எஸ்.ரவிக்குமார், கெளதம் வாசுதேவ மேனன், மிஷ்கின் மூவரில் மிஷ்கின் கலக்கி இருக்கிறார், அவருக்கு இப்படி ஒரு முகமா என ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். மயில்வாகனனாக மிக சிறப்பான நடிப்பை அளித்திருக்கிறார், அவர் தான் சூப்பர் என்று சொல்லலாம்.

மூன்று அழகான பெண்களை நடிக்க வைத்து படத்தின் வேகத்தை கொஞ்சமும் குறையாமல் இளமையாக கொண்டு செல்கின்றார்கள். பல்லவியாக வரும் காயாடு லோஹர் எங்கேயோ பார்த்தோமே என்று குழம்ப, ஆம் பத்தொன்பதாம் நூட்டாண்டு மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இன்ஸ்டா ரீல்ஸில் தனிமையை கொண்டாடும் அமைதியான அழகான பெண்ணாக வலம் வருவார் என்பது ஞாபகம் வந்தது. டெலிவரி பாய் காட்சியில் இப்படித்தானே என நினைத்து, அப்படியில்லை நல்லவேளை யதார்த்தமாக யோசித்து முடித்திருக்கிறார்கள் என்று ஒரு நிமிடம் நினைக்க வைத்து, பின்னர் சினிமாத்தனமாக அதையே செய்து வைக்கிறார்களே என்று நினைக்கும் போதே இவானாவை காமித்து அந்த காட்சிக்கும், படத்தின் முடிவிற்கும் நியாயம் சேர்க்கிறார்கள். ஜாலியான படத்தை ஜாலியாக கடப்போம் ரொம்ப ஏன் யோசிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

முதல் அடிதடி காட்சியில் கேமராமேனின் மெனக்கிடல் வீண் போகவில்லை. பூமர், ஒன் டைம் வியு, டிடிஎப் என சமகால விடயங்களை புகுத்தி படத்தை போர் அடிக்காமல் கொண்டு போகின்றார்கள். விடைத்தாள் திருத்தம், போலி சான்றிதழ் என நம் சமூகத்தின் இன்னொரு மோசமான பக்கத்தை தோலுரித்து காண்பித்திருக்கிறார்கள். நல்ல விஷயத்தை சொல்வதற்கும், கெட்டதை காண்பித்தே சொல்ல வேண்டி இருக்கிறது. எங்கேயும் எரிச்சல் வரவில்லை, என்னடா எடுத்து வைச்சிருக்கீங்க என்று சலிப்பு வரவில்லை, லாஜிக் மிஸ்டேக்ஸ் என்று எதுவும் தோன்றவில்லை பெரிதாக. டயலாக் கூட மிக இயல்பாக சென்றது கடைசி காட்சி மாணவன் மட்டும் கொஞ்சம் செயற்கையாக இருந்தது. அந்த பையன் கொஞ்சம் அதிக வீட்டுப்பாடம் செய்திருக்கலாம். மத்தபடிக்கு எல்லாம் நன்றாகத்தான் போனது.

மொத்ததில் ஆகச்சிறந்த படமென சொல்லவரவில்லை. நல்லதொரு பொழுபோக்குப் படம், ஒரு பொய், ஒரு தவறு அந்த நிமிடத்திற்கான சந்தோஷம் ஆனால் வாழ்நாள் முழுமைக்குமான பாரமென உணர்த்தி, ஒழுங்கா படிங்கடே என தலையில் தட்டி சொல்கிறார் ப்ரதீப். போரடிக்காமல் ஒரு வாட்டி நிச்சயமாய் சிரித்துக்கொண்டே பார்க்கலாம். வெற்றியை கொண்டாடிக் கொண்டு இருக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.

நன்றி

ராணி கணேஷ்

#raniganesh#dragon#moviereview#pradeepranganathan#aswathmarimuthu#tamilcinema