வாழ்வது ஒரு முறை. உங்களுக்காக வாழுங்கள். ஊர் உலகத்துக்காக அல்ல.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நமக்கு நன்கு பரிச்சயமான குடும்பம் ஒன்றில் நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நிலையில் அந்த திருமணத்தை நிறுத்தினார் மணமகள்..
மணமகள் என்ஜினியரிங் முடிச்சிட்டு ஐடி நிறுவனம் ஒன்றில் நல்ல பணியில் இருப்பவர்.
பையன் வீடு நல்ல வசதி..பெரும் பணக்கார குடும்பம். சில தொழில் நிறுவனங்கள் மற்றும் பைனான்ஸ் தொழில். இன்னும் சொல்லப் போனால் தன் தந்தையின் தொழிலை பார்த்துக் கொள்ளும் பையன்.
நிச்சயத்திற்கு பிறகான மணமக்களின் அலைபேசி உரையாடல்கள் மூலமாக இருந்து பையனுக்கு எந்த தனித்துவமும் இல்லாத அம்மா அப்பாவின் பிள்ளை என்பதை உறுதி செய்து கொண்டார்.
அம்மாவின் பேச்சை தட்டாத பிள்ளை. மட்டுமல்ல தனது சுயத்தையும் தொலைக்க வேண்டி வரும் என்பதை புரிந்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு தன் ஐடி பணியை விட்டு விட்டு வீட்டில் இருக்க வேண்டிய சூழல். தன் அடையாளங்களை துறக்க வேண்டிய கட்டாயம் மற்றும் இன்ன பிற காரணங்களை சொல்லி தனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று மறுத்து விட்டார்.
நல்ல குடும்பம் நல்ல பையன் வசதி என்று வெளி உலகம் அதை மட்டுமே பார்க்கும். அதற்கும் மேல பையனின் குணம் சரி இல்லியா ஆள் கேரக்டர் சரி இல்லியா அம்மா அப்பா சொல்லை தட்டாத பொம்மையா
தனித்துவ அடையாளங்களோ சுயமோ இல்லாத ஆளா என்பதை எல்லாம் அளக்க தவறி விடுகிறார்கள் அல்லது அதை பின்னுக்கு தள்ளி விடுகிறார்கள்..
இன்றைக்கு நம்ம ஆட்கள்கிட்ட திருமணத்துக்கான நல்ல பையன் என்றால் உங்கள் அளவு கோல் என்ன என்று கேட்டுப்பாருங்கள்..
சிகரட் தண்ணி கிடையாது…அம்மா அப்பா சொல்லை தட்டமாட்டான்..இதை தான் முன்னிறுத்துவார்கள்..
தம் தண்ணி போடாதவன் எல்லாம் நல்லவனா? அம்மா அப்பா சொல்லை தட்டாதவன் எல்லாம் நல்லவனா?
அம்மா அப்பா சரியானதை சொன்னால் ஏற்கவும் தவறானதை சொன்னால் மறுக்கவும் செய்யும் முதுகெலும்புள்ள ஆண்மகன்கள் எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சி போச்சு.
அம்மாக்களின் முந்தானைகளை திருமணத்துக்கு பிறகும் பிடித்து திரியும் ஆண்கள் திருமணத்துக்கே லாயக்கில்லாதவர்கள் என்பதை யார் அளப்பது?
நாத்தனார்களின் சொல்லை கேட்டு மனைவிகளை மதிக்காத சரி வர நடத்த தெரியாத ஆண்களை எந்த அளவு கோலில் அளப்பது?
அம்மாவுக்கும் மனைவிக்குமான சண்டைகளில் மிக்சர் சாப்பிடும் ஆண்கள் ரொம்ப ரொம்ப சிக்கலானவர்கள்..
ஒரு ஆண் தனித்துவமானவனாக சரி தவறுகளை ஆராய்ந்து நியாயத்தின் பக்கம் நிற்பவனாக
சக மனுசியின் உணர்வுகளை புரிந்தவனாக அவர்களை தனது வாழ்வில் சமத்துவமாக கண்ணியமாக நடத்தவும் பேசவும் தெரிந்தவனாக இருக்க வேண்டும்.
திருமணம் என்பது கௌரவம் பெருமை மற்றவர்கள் முன்னிலையில் மரியாதை என்பதை எல்லாம் தூர தூக்கி வெச்சிட்டு என் மகன் மகளின் சந்தோசம் மட்டுமே முக்கியம்
அவளுக்கு உண்மையான ஒரு சிக்கல் என்றால் ஊர் உலகம் பற்றி எந்த கவலையும் இன்றி சரியான தீர்வை தராத தாய் தகப்பனால் உடன்பிறப்புகளால் ரிதன்யாக்களின் மரணங்களை ஒரு போதும் தவிர்க்க முடியாது.
காதல் திருமணங்களிலேயே எத்தனையோ பிரிவுகளை சிக்கல்களை பார்க்கிறோம். அப்படி இருக்க நிச்சயிக்கப் பட்ட திருமணங்களில் சில நம்பிக்கைகளுடன் தான் முன்னெடுக்கிறோம்.
நம் நம்பிக்கை சரியாகவும் இருக்கலாம். பொய்த்தும் போகலாம். பொய்த்து போகும் தருணங்களில் அடுத்த கட்டத்துக்கு நகரும் துணிச்சல் குடும்பங்களுக்கு வேண்டும்.
உங்கள் குழந்தைகள் ஒரு பிரச்சினை என்று வந்தால் அதற்கான சரியான தீர்வு தர வேண்டுமே ஒழிய ஊர்ல உலகத்துல நடக்காததா அட்ஜஸ்ட் பண்ணி போம்மா என்ற தீர்வை மட்டுமே சொல்லும் தாயாக தந்தையாக உடன்பிறந்தவர்களாக மட்டுமே நீங்கள் இருப்பீர்கள் என்றால் இந்த கொலையின் முக்கிய குற்றவாளி நீங்களும் தான்.
அப்படியானால் திருமணம் முடிந்ததும் வரும் எல்லா பிரச்சினைகளுக்கும் மணமுறிவா தீர்வு? அப்படி அல்ல. திருமணத்துக்கு முடிந்த உடனே மட்டுமல்ல கடைசி வரைக்குமே கணவன் மனைவி சண்டைகள் இருக்கும்.
ஆனால் ஒரு ஆண் அல்லது பெண் தனக்கு தகுதியானவள் தானா இல்லையா மரியாதையா நடத்துறவனா சுயத்தோடு இருப்பவனா தன்னை கண்ணியமாய் நடத்துறவனா என்பதை அறிய ஆண்டுக்கணக்கில் எல்லாம் பார்க்க வேண்டியது இல்லை.
எது வரை சகிக்கலாம் எது வரை ஏற்கலாம் எதை சகிக்கலாம் என்ற வரையறைகள் இருக்கு தானே. முரண்கள் எதில் என்பதில் இருக்கிறது.
மாமானார் மாமியார் நகை பணத்துக்கு அடி போடும் போது மிக்சர் தின்னும் ஆண்மகன் ஒரு போதும் சரி வர மாட்டான். மற்றவர்கள் தன் மனைவியை கண்ணியக்குறைவாக பேசும் போது நடத்தும் போது நவதுவாரங்களை மூடிக் கொண்டு இருப்பவன் இல்லறத்துக்கு லாயக்கற்றவன்.
சொல்லும் சிக்கல்களை எல்லாம் காது கொடுத்து கேட்பது போல கேட்டு விட்டு அட்ஜஸ்ட் பண்ணி போம்மா என்ற தீர்வை மட்டுமே எப்போதும் சொல்லும் அப்பன் ஆத்தாக்களும் சேர்ந்தே தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.
நாம் நினைத்தது போன்ற வாழ்க்கை இல்லியா மிகுந்த ஏமாற்றமா ஒரு வேளை கொஞ்ச காலத்துக்கு பிறகு மாறலாம் என்ற நம்பிக்கையே இல்லையா மணமுறிவு தவிர்க்க இயலாததா தயவு செய்து முன்னெடுங்கள்.
நல்ல தாய் தகப்பன் இது போன்ற சிக்கல்களில் இருந்து மகளை வெளி கொண்டு வர எல்லா உதவிகளையும் தார்மீக ஆதரவையும் தந்து நிற்க வேண்டும்.
எத்தனையோ மண முறிவுகளை இரண்டாம் திருமணங்களை பார்த்து இருக்கிறேன்.
நட்பு வட்டங்களில் அப்படி இரண்டாம் திருமணங்களில் சிறப்பாக வாழும் பல உதாரணங்களை பார்த்து இருக்கிறேன்.
இது தான் எனக்கு விதிக்கப்பட்டது ஐயோ உலகமே முடிஞ்சி போச்சு என்று உயிர்களை மாய்த்துக் கொள்ளும் பைத்தியக்காரத்தனங்களை செய்யாத அளவுக்கு
உங்கள் குழந்தைகளை நண்பர்களை உடன்பிறப்புகளை தைரியமானவர்களாக வளருங்கள்..மாற்றுங்கள். எப்போதும் ஆதரவாய் நில்லுங்கள்.

